மாநில தலைவர் தற்காலிக பணிநீக்கம் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன் 4: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் கடந்த மாதம் 31ம்தேதி பணி ஓய்வுபெறும் நாளில் தமிழக அரசால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் கவுதமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரி ஆனந்தன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ், மாவட்ட பொருளாளர் அறிவழகன், அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட இணை செய லாளர் ஆனந்தன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி, பொது சுகாதாரத்துறை அனைத்து ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர். அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில தணிக்கையாளர் ராஜராஜன் நன்றி கூறினார். அரியலூர்: அரசு ஊழியர் சங்க மாநில தலைவரை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ, ஜியோவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: