‘10 டிரிப்பை 6 டிரிப்பா குறைச்சுட்டாங்க’ விராலிப்பட்டியில் 5 கிமீ நடந்து சென்று பஸ் ஏறும் மக்கள் முன்புபோல் இயக்கப்படுமா?

திண்டுக்கல், ஜூன் 4: விராலிப்பட்டிக்கு தினமும் 10 தடவை அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய், டிஆர்ஓ வேலு உள்பட பலர் பங்கேற்றனர். விராலிப்பட்டியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘திண்டுக்கல்லில் இருந்து செட்டிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, காப்பிளியபட்டி, முனியபிள்ளைபட்டி வழியாக விராலிபட்டிக்கு முன்பு தினமும் 10 தடவை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.  இவற்றை தற்போது 6 முறையாக குறைத்துள்ளனர். இந்த பஸ்களும் முறையாக வருவதில்லை. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ்கள் முறையாக வராததால் 5 கிமீ தூரம் நடந்து வந்து திண்டுக்கல்லில் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் யாருமே செவிசாய்ப்பதில்லை. எனவே கலெக்டர் முன்பு மாதிரி தினமும் 10 தடவை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

பழநி அருகே கணக்கன்பட்டி பொட்டம்பட்டி காலனியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் இப்பகுதியில் 39 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 81 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

மீதமுள்ள காலி இடத்தில் முன்பக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு 40 சென்ட் நிலம், ஊருக்கு பின்பக்கம் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முன்பக்க நிலம் 40 சென்ட்டை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆயக்குடி போலீஸ் ஸ்டேஷனில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்பு பின்பகுதியில் உள்ள நிலத்தை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். இந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகம் பொது கழிப்பிடம் கட்டி கொடுத்தது. தற்போது ஒரு பிரிவினருக்கு அந்த இடத்தை பட்டா வழங்கிவிட்டு, அதிகாரிகள் அளக்க வருகின்றனர்.

நாங்கள் தடுத்தால் சிறையில் தள்ளுவோம் என்கின்றனர். எங்கள் கழிப்பிடத்தை பாதுகாப்பதுடன் மகளிர் சுகாதார வளாகத்தை பெரிதுபடுத்த வேண்டும். மேலும் அந்த இடத்தில் சமுதாயக்கூடம், நூலகம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுக்களை பெற்ற கலெக்டர் வினய், இதுகுறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: