ஆற்காடு, திருப்பத்தூர் அருகே பரபரப்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆற்காடு, மே 29: ஆற்காடு, திருப்பத்தூர் அருேக குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பொன்னாமங்கலம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து 6 மாதமாகியும் சீரமைக்கப்படாததால், குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று எடுத்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலதடவை முறையிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் ஆரணி- செய்யாறு சாலையில் உள்ள கன்னிகாபுரம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பஸ்கள் உட்பட பல்வேறு வாகனங்களை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. சிலர் மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் அங்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளர், பிடிஓவிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று, மறியலை கைவிட்டு, அரசு பஸ்ைச விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: