சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? பட்டா கேட்டு தாசில்தார் ஆபீஸ் முற்றுகை

காரைக்குடி, மே 28: காரைக்குடி அருகே அரசு புறம்போக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 30 குடும்பங்கள் பட்டா கேட்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது காரைக்குடி ராஜீவ்காந்தி நகர் சேர்வார் ஊரணி, குட்டி கிராமபட்டி, கண்டனூர் ஊரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனை கண்டித்து குடும்பத்துடன் இப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

சாத்தையா (விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர்) கூறுகையில், ‘‘இப்பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தும் பட்டா வழங்காமல் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் புறக்கணித்ததால் நீதிமன்றம் சென்றனர். கடந்த பிப்ரவரியில் விசாரணை செய்து பட்டா தரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தாசில்தார் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளார். இதேநிலை தொடர்ந்தால் வருவாய்துறை அலுவலகத்தில் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

முத்து (விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்) கூறுகையில், ‘‘கண்டனூரில் எந்த வித அடிப்படை உரிமையும் இல்லாமல் இருந்தனர். இதுகுறித்து போராட்டம் நடத்திய போது அதிகாரிகள் அங்கிருந்து அகற்றி இங்கு குடியமர்த்தினர். ஆனால் இதுவரை பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்’’ என்றார்.

உய்யவந்தால் கூறுகையில், ‘‘10 வருடமாக மின் இணைப்பு இல்லாமல் உள்ளோம். அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன்இல்லை. லைட் வசதி, குடிநீர் என அடிப்படை வசதியின்றி தவித்து வருகிறோம்’’ என்றார். பொன்னம்மாள் கூறுகையில், ‘‘லைட் இல்லாததால் இரவு நேரங்களில் விஷ பூச்சி தொல்லை அதிகஅளவில் உள்ளது. பாம்பு கடித்து இதுவரை இரண்டு பேருக்கு மேல் இறந்துள்ளனர். அதிகாரிகளின் புறக்கணிப்பால் நாங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளோம்’’ என்றார்.

Related Stories: