சேலம் தொகுதியில் தபால் ஓட்டுகளிலும் திமுக அசத்தல்

சேலம், மே 25: சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு, 3,849 தபால் வாக்குகள் கிடைத்தது. நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட, சேலம் தொகுதியைச் சேர்ந்த  8,838 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டன. இதில் வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று முன்தினம் காலை 8 மணி வரை 6,575 வாக்குகள், வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரிக்கு வந்தது. இவை 4 டேபிள்களில் தலா 500 வாக்குகள் அடிப்படையில் எண்ணப்பட்டன.

Advertising
Advertising

பல்வேறு காரணங்களால் 871 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, 5,704 தபால் வாக்குகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தபால் வாக்கில் அதிகபட்சமாக, திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு, 3,849 வாக்குகள் பதிவானது. அதிமுக வேட்பாளர் சரவணன் 1,258 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி பிரபு மணிகண்டன் 190 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா அம்மையப்பன் 149 வாக்குகளும், அமமுக வேட்பாளர் எஸ்.கே செல்வம் 80 வாக்குகளும் பெற்றனர். இதுதவிர, நோட்டாவிற்கு 132 தபால் வாக்குகள் பதிவானது.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு பதிவான தபால் வாக்குகளில், திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன், அதிமுக வேட்பாளரை விட 2,596 வாக்குகள் அதிகமாக பெற்றார். இதனிடையே வாக்கு எண்ணும் நாளான்று காலை தாமதமாக கொண்டுவரப்பட்ட தபால் வாக்குகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், தாமதமாக வந்ததாக கூறி அந்த வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

Related Stories: