திருத்துறைப்பூண்டி பகுதியில் முள்ளியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி, மே 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர பகுதி மடப்புரத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வேதை பைபாஸ் சாலை வரை செல்லும் முள்ளியாற்றில் வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு கழிவு நீர் திறந்து விடுகின்றனர். கழிவு நீர் திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி வேதை சாலை அருகில் உள்ள முள்ளியாற்று பாலத்தில் மழைநீர் வடிவதற்காக பாலத்தின் ஓரத்தில் சிறிய அளவில் ஓட்டை உள்ளது.

ஆனால் மழைநீர் வடிவதற்கு மட்டும் அல்லாமல் அருகில் உள்ள கடைகளில் உள்ள கழிவு நீரை கொண்டு வந்து ஆற்றில் தண்ணீர் இருக்கும்போதும், இல்லாதபோதும் இந்த முள்ளியாற்றில் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஊற்றுகின்றனர். ஆனால் சமீபகாலமாக பகல் நேரத்தில் யாருக்கும் பயப்படாமல் கழிவு நீரை ஊற்றி வருகின்றனர். எனவே முள்ளியாற்றில் முழுவதும் கழிவு நீர் திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று முள்ளியாற்று பாலத்தில் கழிவு நீரை கொண்டு வந்து ஊற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: