பந்தநல்லூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியல்

கும்பகோணம், மே 19: பந்தநல்லூர் சாலை கீழகாட்டூர் கிராம மக்கள் தங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் சாலையிலுள்ள கீழக்காட்டூர் கிராமத்தில் கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை.  இதனால் கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து உபயோகித்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, போதிய அளவில் மின்சாரம் வரவில்லை, குறைந்த அழுத்தம் மின்சாரம் வருவதால், மோட்டார் இயங்காததால் குடிநீர்  வழங்கவில்லை என்று பதில் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கீழக்காட்டூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள்- பந்தநல்லூர் சாலையில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து பந்தநல்லூர் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க உடனடியாக ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உத்தரவாதம் அளித்ததனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

Related Stories: