இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மெட்ரிக் பள்ளிகள் சங்க நிர்வாகி வலியுறுத்தல்

மன்னார்குடி, மே 17: திருவாரூர் மாவட்ட  நர்சரி பிரைமரி,  மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ தனியார்  பள்ளிகள்  சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற  தமிழ்நாடு  நர்சரி பிரைமரி,  மெட்ரிக் மேல்நிலை மற்றும்  சிபிஎஸ்இ தனியார்  பள்ளிகள்  சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் நந்தகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளியிலும் இலவச கட்டாய கல்வி ஆர்டி சட்டப்படி 25 சதவீதம் மாணவர் சேர்க்கை அரசு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.  அரசு அறிவித்த நேரம் தேர்தல் காலம் என்பதால் பெற்றோர்கள்  வருமான சான்று, குடியிருப்பு, பிறப்பு, சாதி சான்று பெற ஆன் லைன்  இணையதளம் சரியாக இயங்கவில்லை. உரிய ஆவணங்கள் பெற பெற்றோர்கள் சிரமப்பட்டு வருவதால் இத்திட்டத்தின் மூலம் மாணவர்களை சேர்க்க முடியவில்லை. எனவே தமிழக அரசு ஜூன் 30 வரை கால அவகாசம் அளித்து பெற்றோர்கள் மாணவர்களை ஆன்லைனில் சேர்க்க உதவி செய்ய வேண்டும்.

2017-18ம் கல்வி ஆண்டிற்குரிய ஆர்டிஇ கல்வி கட்டண பாக்கி மெட்ரிக் பள்ளிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை உடனடியாக இதனை வழங்கினால் தான் பள்ளிகளை தொடர்ந்து நடத்த முடியும்.

தனியார் பள்ளிகளுக்கு  தொடர் அங்கீகாரம் கொடுக்க ஆன்லைன் மூலம் அங்கீகாரம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.  சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்துறை கட்டிட உறுதிசான்று, உரிமைச் சான்று தந்தால் ஆன்லைனில் தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டு விடும்.  ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் நாங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். எங்களுக்கு பணம் தர வேண்டும். இல்லையென்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என இழுத்தடிப்பது கண்டனத்துக்குரியது.  இந்த ஆன்லைன் அங்கீகாரம் இம்மாத இறுதிக்குள் எல்லா பள்ளிகளுக்கும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள்  தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் தொடர் பள்ளி அங்கீகாரம் தருவோம் என அச்சுறுத்துகின்றனர்.  எனவே கல்வித்துறை அதிகாரிகள்  லஞ்சம் கேட்டு மிரட்டுகிற போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச கட்டாய கல்வி சட்டப்படி அரசு பள்ளி கல்வி கட்டணம் மட்டுமே வழங்குகிறது, மீதம் நோட்டு புத்தகம் மற்றும் இதர பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளுக்கு தனி கட்டணம் அதனை அரசு தருவதில்லை. அரசு பள்ளி கல்வி கட்டணம் மட்டுமே தருகிறது. அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக தரவில்லை. அரசு ஒரு மாணவனுக்கு  ரூ.11 ஆயிரத்து 500 தருவதாக  சொல்லி விட்டு 4 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள், இதற்கு அரசு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் மாணவர்களின் பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் புகார் செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போல் தமிழக அரசு  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: