வேளாண் இயக்கத்தின்கீழ் மதுக்கூரில் விஞ்ஞான முறையில் மண் மாதிரி சேகரிப்பு பணி தீவிரம்

பட்டுக்கோட்டை, மே 17:  மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின்கீழ் விஞ்ஞான முறையில் ஜிபிஎஸ் செயலி மூலம் மண்மாதிரி சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.  மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து மதிப்பிடும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் 3 இடங்களிலும் 50 சென்டி மீட்டர் நீளம், 50 சென்டி மீட்டர் அகலம் மற்றும் 50 செ.மீ ஆழம் கொண்ட குழிகள் எடுக்கப்பட்டு விஞ்ஞான முறைப்படி ஒரு குழிக்கு 2 மண் மாதிரிகள் வீதம் மண் ஆய்வுக்கு சேகரிக்கப்படுகிறது. இத்துடன் அதே கிராமத்தில் மண்ணின் மேற்பரப்பிலிருந்து 15 செ.மீ ஆழத்தில் வெவ்வேறு இடங்களில் 10 மண்மாதிரி சேகரிக்கப்படுகிறது. கிராமங்களில் ஜிபிஎஸ் செயலி மூலம் அட்சரேகை, தீர்க்கரேகை குறியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் குழிகள் எடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகள் ஆடுதுறை மண் பரிசோதனை நிலையத்துக்கு தேவையான ஆவணங்களுடன் அனுப்பப்படவுள்ளது.  இம்முறையில் குறிப்பிட்ட இடங்களை ஜிபிஎஸ் செயலி மூலம் கண்டறிந்து மண்மாதிரிகள் எடுக்கப்படுவதால் பரிசோதனை முடிவுகளை துல்லியமாக பெற முடியும். எனவே இம்முறையை கையாண்டு வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலர்கள், மதுக்கூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 48 வருவாய் கிராமங்களிலும் மண்மாதிரி சேகரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: