எழுமலையில் ஆக்கிரமிப்புகளால் சுருங்கியது சாலை பஸ்கள் செல்ல முடியவில்லை

உசிலம்பட்டி, மே 15: எழுமலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பேருந்துகள் சென்றுவர முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை மாவட்டம், எழுமலைக்கு பேரையூரிலிருந்து சேடபட்டி, சின்னக்கட்டளை, அதிகாரிபட்டி, ஆத்தாங்கரைப்பட்டி வழியாக அரசுப்பேருந்து செல்கிறது. இந்த சாலையில் கணக்கன்குளம் கண்மாய் அருகிலேயே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் எழுமலை பேருந்து நிலையத்திற்கு செல்ல முடிவதில்லை. 1 கிலோ மீட்டர் தூரம் பயணிகள் இறங்கி நடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பேருந்துகள் பேருந்துநிலையம் செல்வதற்கு இடைஞ்சலாக கிருஷ்ணன்கோவில் தெருவிலிருந்து பேட்டைகாளியம்மன்கோவில் பஜார் முழுவதும் கனரக வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதனால் பேருந்துகளை இந்த சாலையில் இயக்க முடியவில்லை. மேலும் சாலையின் இருபுறங்களிலிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலை சுருங்கிவிட்டது. இதனால் பேருந்து சென்று வரமுடியவில்லை. இதனால் இந்த சாலையில் புல்லுக்கட்டை மைதானம் வரையுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும். அதேபோல் இந்த பஜாரில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடைசெய்யப்பட வேண்டும்.

மாறாக சாலைக்கு இடையூறாக இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து சென்றுவர வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், கிருஷ்ணன்கோவில் தெருவிலிருந்து பேட்டைகாளியம்மன்கோவில் பஜார் முழுவதும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. இதுபோக டூவீலர் போன்ற வாகனங்களையும் நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் சாலை சுருங்கிவிட்டது. பேருந்துகளை இயக்க முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: