₹740க்கு பதிலாக ₹5 ஆயிரம் மின் கட்டணம் ஊழியரின் தவறான தகவலால் நுகர்வோர் அதிர்ச்சி

வாழப்பாடி, மே 15: வாழப்பாடி அருகே மின்கட்டணம் கணக்கிட வந்த ஊழியர் ₹740க்கு பதிலாக ₹5 ஆயிரம் என தெரிவித்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அதிகாரியிடம் நேரில் புகார் அவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடியை சேர்ந்தவர் முருகானந்தம் (48). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர் தனது வீட்டிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேளூர் மின்சார வாரிய அலுவலகத்தின் பதிவு செய்து மின் இணைப்பு பெற்றுள்ளார்.  இவரது வீட்டில் பிரிட்ஜ், டிவி, மூன்று பேன்கள், யுபிஎஸ் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு மின்கட்டணம் கணக்கிட வந்த மின்வாரிய ஊழியர், இந்த மாதம் மின்சார கட்டணம் ₹5 ஆயிரத்துக்கும்  மேல் வரும் என முருகானந்தத்திடம் தெரிவித்து உள்ளார். இதை கேட்டு முருகானந்தம் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் நேற்று மாலை ₹740 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என அவருடையை செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து முருகானந்தம், மின்மீட்டரில் உள்ள அளவை செல்போனில் படம் பிடித்து எடுத்துசென்று, சிங்கிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் பொறுப்பு வனிதாவிடம் தெரிவித்துள்ளார். அவருடன் வக்கீல் பாலாஜி சென்றுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட செயற்பொறியாளர், அதிகாரிகளை நேரில் அனுப்பி டிஜிட்டல் மீட்டரை ஆய்வு செய்து விசாரிப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: