நாமக்கல், கொல்லிமலை அரசு ஐடிஐகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கல்

நாமக்கல், மே 7:  நாமக்கல், கொல்லிமலை அரசு ஐடிஐகளில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நமது நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும், நாமக்கல் அரசு ஐடிஐ., கொல்லிமலை அரசு ஐடிஐ.,(பழங்குடி இன மக்கள் மட்டும்) மற்றும் தனியார் ஐடிஐகளில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ படித்த மாணவ, மாணவிகளிடம் இருந்து, ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் வறவேற்கப்படுகின்றன. நாமக்கல் அரசு ஐடிஐயில் ஆண்கள், பெண்களுக்கு இரண்டு ஆண்டு படிப்பாக எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன், மெஷினிஸ்ட் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கும், ஓராண்டு படிப்பாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் ஆகிய தொழிற்பிரிவிற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு மட்டும் ஓராண்டு படிப்பாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் டிடிபி (டெஸ்க்டாப் பப்ளிஸிங்) ஆப்ரேட்டர் போன்ற தொழிற் பிரிவுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு, பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும், மாதம் ₹500 உதவித்தொகை, இலவச லேப்டாப், சைக்கிள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசால் தொழிற்தேர்வு நடத்தப்பட்டு தேசிய தொழிற்சான்று வழங்கப்படுகிறது.

மேலும், முன்னணி நிறுவனங்கள் மூலம் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. எனவே,  இப்பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள், கீரம்பூரில் உள்ள நாமக்கல் அரசு ஐடிஐக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, டி.சி நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: