நாகை மாவட்டத்தில் ரசாயன கலப்படம் செய்த மாம்பழங்கள் விற்பனை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சீர்காழி, மே 3:  நாகை மாவட்டத்தில் ரசாயன கலப்படம் செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம்,  மயிலாடுதுறை,  குத்தாலம்,  திருக்கடையூர்,  தரங்கம்பாடி, செம்பனார்கோயில்,  நாகப்பட்டினம், வேதாரண்யம்,  கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாம்பழ கடைகள்  உள்ளன.  இந்த மாம்பழ கடைகளில் தற்பொழுது  மாம்பழ சீசன்  தொடங்கியதால்  அதிகளவில் மாம்பழங்கள்  விற்பனைக்கு  வந்துள்ளன.  குறிப்பாக  தமிழ்நாட்டு மாம்பழம்குறைவாக விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் வெளிமாநிலமான  ஆந்திரா,  கர்நாடகா,  கேரளா  பகுதிகளிலிருந்து காலாபாடி, செந்தூரா, பாதிரி, பங்கனபள்ளி, ருமானி ஒட்டு போன்ற வகைகளை சேர்ந்த  மாம்பழங்கள்  அதிகளவில்  விற்பனைக்கு வந்துள்ளன. இதனை  அனைவரும்  ஆர்வத்துடன் வாங்கி  சாப்பிட்டு வருகின்றனர்.  மாம்பழம்  சீசனில் மட்டுமே  கிடைப்பதால்  குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது  வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான மாம்பழ கடைகளில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட

வாய்ப்பு உள்ளது.

மாம்பழம் இயற்கையாகப் பழுக்க எத்தலின் என்னும் ரசாயனம் சுரக்கும். அதன்பிறகே அது பழுக்க ஆரம்பிக்கும். பழங்களும் விற்பனையின் போது தயார் நிலையில் இருக்கும். ஆனால் தற்போது கார்பைடு கல் உள்ளிட்ட ரசாயனம் பயன்படுத்தி இரண்டு நாட்களிலேயே பழுக்க வைக்கின்றனர். இதனால் அவை கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் மக்களை ஈர்க்கிறது. மக்களும் ஏமாந்து வாங்கி விடுகின்றனர்.செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும்போது ஹைப்போ தைராய்டு, நீரிழிவு நோய், கருப்பைப் பிரச்னை, புற்றுநோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மாம்பழம் சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கு பால் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அப்படிக் கொடுத்தால் குழந்தையின் உடல்நிலையை

பாதிக்க வாய்ப்புள்ளது.மாம்பழத்தை நறுக்கும்போதே அதன் சாறு ஒழுகும். செயற்கை பழத்தில் சாறு மிகக்  குறைவாக வரும் அல்லது வரவே வராது. காரணம் எத்தலின் ரசாயனம்தான் அந்த சாறை  உருவாக்கும். செயற்கை முறையில் அது சாத்தியமில்லை. எனவே மாம்பழவாங்கும்போது  இதனை நன்கு கவனித்து வாங்க வேண்டும்.  வியாபாரிகள்  பொதுமக்களின் நலன்  கருதி  ரசாயனம் கலந்து  பழுக்க வைத்த மாம்பழத்தை  விற்பனை செய்வதை  முற்றிலும் தடுக்க வேண்டும்.

ரசாயனம் கலந்து பழுக்க வைத்த மாம்பழத்தை  மாம்பழ கடை நடத்தும் உரிமையாளர் குடும்பத்தினரும் அந்த பழத்தை தான்  சாப்பிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.  நாகை மாவட்டம் முழுவதும்  ரசாயனம்  கலந்த  பழுக்க வைத்த மாம்பழங்கள்  விற்பனை செய்யும் கடைகளை மாவட்ட  உணவு  பாதுகாப்பு துறை அதிகாரிகள்  ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாம்பழம் சதையின் தோற்றம் மற்றும் நிறம் மாம்பழத்தை நறுக்கும்போதே அதன் வாசனை தெரியும். அதேசமயம் அதன் சதைப்பகுதி பளீர் சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். செயற்கை மாம்பழத்தில் வெளிர் மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதேபோல் இயற்கையாகப் பழுத்த பழங்கள் வெளிப்புறத்தில் பாதிக்கப்பட்ட, அழுகியது போன்ற தோற்றத்தில் இருக்கும். ஆனால் அதன் சதைப்பகுதி அப்படி இருக்காது. சுவை நிறைந்ததாக இருக்கும். செயற்கை மாம்பழம் பழுத்ததாக இருந்தாலும் அதன் சதைப்பகுதி கெட்டியாக இருக்கும். இயற்கை பழம் அப்படி இல்லாமல் கொழகொழவென இருக்கும். சதை தோலில் ஒட்டாமல் இருக்கும்.

கண்டுபிடிப்பது எப்படி?

மாம்பழம் வாங்கியதும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் போடுங்கள்.  பழுத்த பழமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி அடியில் போகும். மேலேயே மிதந்தால்  அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழம். செயற்கை முறையில் பழுக்க  வைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல்களில் ஆங்காங்கே பச்சை நிறம் தென்படும்.  இயற்கையான பழத்தில் இப்படி பச்சை நிறம் இருக்காது. அதேசமயம் சீரான மஞ்சள்  நிறமும் இருக்காது. அதேபோல் அதன் மஞ்சள் நிறம் வெளீரென இருக்கும். இப்படி  இருந்தால் அவை

செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களாகும்.

Related Stories: