சாதி பெயரை சொல்லி மிரட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கணவாய் மக்கள் மனு

பெரம்பலூர், ஏப். 24: சாதி பெயரை சொல்லி அடித்து மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கீழக்கணவாய் கிராமத்தினர் புகார் மனு அனுப்பினர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று மனு அளித்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் நாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் வசித்து வருகிறோம்.

இங்கு கடந்த 19ம் தேதியன்று எங்கள் பகுதி வாலிபர்கள் மணிகண்டன், சிவா, ராஜதுரை, மதுபாலா ஆகியோர் அப்பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு சோடா வாங்க சென்றனர். அப்போது வழிமறித்து தர்மலிங்கம் உள்ளிட்ட சிலர் இரும்புக்கம்பி, உருட்டு கட்டையால் அடித்து இழுத்து சென்றனர். அங்கு சரவணன், விஸ்வநாதன், சின்னசாமி, மாதவன், செல்வராசு, பெரியண்ணன், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் மிரட்டியுள்ளனர். வாலிபர்களின் அலறல் சத்தம் கேட்டு எங்கள் பகுதி பொதுமக்கள் சென்று அவர்களை மீட்டு வந்தனர். இதே ஊரை சேர்ந்த சுபாஷ், விமலா ஆகியோரது கலப்பு திருமணத்தால் ஆரம்பமான சாதி சண்டையில் 10 பேர் மீது பிசிஆர் வழக்கு போடப்பட்டு வழக்கு நடந்து வருவதால் அந்த வழக்ைக வாபஸ் பெற வலியுறுத்தி வீண்வம்புகளை தொடர்ந்து வருகின்றனர்.இதனால் எங்கள் பகுதி பெண்கள், பெரம்பலூர் செட்டிக்குளம் சாலைக்கு பஸ் ஏற சென்றாலோ, குடிநீர் பிடிக்க சென்றாலோ அங்கு வந்து எதிர்தரப்பு வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: