நீடாமங்கலம் பெரம்பூர்- மணல்மேடு இடையே கோரையாற்றில் சிமெண்ட் கான்கிரீட் பாலம் இல்லாததால் மக்கள் அவதி

நீடாமங்கலம், ஏப். 23: நீடாமங்கலம் அருகில் பெரம்பூர்- மணல்மேடு இடையே கோரையாற்றில் சிமெண்ட் கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது பெரம்பூர் ஊராட்சி. இங்கு கோரையாற்றில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று அப்போது இருந்த ஊராட்சி தலைவர் முயற்சியால் மூங்கில் பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் பூவனூர் ஊராட்சி மணல் மேடு வழியாக பூவனூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.ஆற்றுக்கரை ஓரத்தில் உள்ள மணல் மேடு கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நீடாமங்கலம் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து அல்லது வாகனத்தில் சென்று தான் செல்ல வேண்டும். இந்நிலையில் கோரையாற்றில் சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைத்தால் கோரையாற்றை தாண்டிய உடன் பெரம்பூரிலிருந்து நீடாமங்கலத்திற்கு பஸ் அல்லது வாகனங்களில் சென்று விடலாம். இங்குள்ள மாணவர்கள் பூவனூர் பள்ளிக்கு செல்ல சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். பாலம் அமைத்தால் அருகில் 2 கிலோ மீட்டரில் உள்ள பெரம்பூர் மற்றும் நீடாமங்கலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கும் எளிதாக  சென்று விடலாம். எனவே மக்கள், மாணவர்கள் நலன் கருதி பெரம்பூர்- மணல்மேடு இடையே கோரையாற்றில் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: