பள்ளிகளில் கட்டாயம் உடற்பயிற்சி வகுப்புகள் அமல்படுத்த வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

பழநி, ஏப்.22: பள்ளிகளில் கட்டாய உடற்பயிற்சி வகுப்புகள் அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒரு காலத்தில் உடற்பயிற்சி வகுப்புகள், விவசாய வகுப்புகள், நீதிபோதனை வகுப்புகள், ஓவிய வகுப்புகள் என பாடங்களை கற்பிக்க தனித்தனி பாடவேளைகள் இருந்தன. ஆனால், தற்போது தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசு பள்ளிகளிலும் தேர்வுகள் மற்றும் மதிப்பெண்கள் மீது வெறி கொண்டு மாறிவிட்ட சூழ்நிலை நிலவுகிறது. இதனால் இதுபோன்ற வகுப்புகள் தற்போது காணாமல் போய்விட்டன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதற்கான ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் பகுதி நேர ஆசிரியர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு பாடவேளைகள் ஒதுக்கப்படாமல் மாற்றுப்பணிகளே வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் என்எஸ்எஸ், என்சிசி போன்றவைகூட நிறத்தப்பட்டு விட்டன. இவைகள் காணாமல் போனதற்கு பள்ளிகள் அல்லது கல்வித்துறைகள்தான் காரணம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி கூறுகையில், உடற்பயிற்சி போன்ற வகுப்புகள் நிறுத்தப்பட்டு  மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாக மாற்றும் நிகழ்வே தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகளை முன்புபோல் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கணினி விளையாட்டுகளில் சுருங்கி விட்டனர். இவற்றில் இருந்து மாணவர்களை விடுவிப்பது பள்ளிக் கல்வித்துறையின்  தலையாய கடமையாகும். எனவே, பள்ளிகளில் கட்டாய உடற்பயிற்சி போன்ற இதர வகுப்புகளை முழுவீச்சில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.

Related Stories: