கெங்கவல்லி பகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

கெங்கவல்லி, ஏப்.19: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 173 பேரும், பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 959 பேரும், இதர இனத்தவர் 3 பேரும் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்த்ம 263 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆண்களை விட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். ஆண்கள் 83 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 90 ஆயிரத்து 978 பேரும், இதரர் ஒருவரும் என மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 850 பேர் வாக்களித்தனர். இது, 76.64 சதவீதமாகும். ஆண்களை விட பெண்கள் ஆர்வத்துடன் வாக்குரிமையை பதிவு செய்துள்ளனர். கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட 67,68 நத்தக்கரை வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

கடம்பூர் ராமநாதபுரம் அரசு தொடக்கப்பள்ளி மையத்தில் 55 ஓட்டுக்கள் பதிவான நிலையில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மணிவிழுந்தான் காலனியில் 38வது வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவுக்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. தெடாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுதால் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.

அப்போது, வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக அங்கிருந்த பெண்கள் தெரிவித்தனர். உடனே, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம், வீரகனூர் நகர செயலாளர் அழகுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் எட்டிக்கூட பார்க்கவில்லை. 

Related Stories: