தேனி பைபாஸ் சாலையை அகலமாக்க முட்டுக்கட்டை போடும் வனத்துறை

தேனி, ஏப். 17: தேனி நகரில் பைபாஸ் ரோட்டினை அகலப்படுத்தும் பணி நடந்து வந்த நிலையில் வனத்துறை முட்டுக்கட்டையிடுவதால் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. தேனி நகருக்கான புதிய பஸ் நிலையம் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இப்புதிய பஸ்நிலையத்திலிருந்து அனைத்து வழித்தடங்களுக்கும் பயணிகள் பேருந்துகள் வந்து செல்கின்றன. புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு பைபாஸ் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளம் செல்லும் பெரும்பாலானவர்கள் பைபாஸ் சாலையையே போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

தேனி நகர் மதுரை சாலையில் இருந்து அன்னஞ்சி திருப்பம் வரையிலான சுமார் 4.5 கிமீ நீள சாலையானது தற்போது 7 மீட்டர் அகலமுள்ள சாலையாக உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலையினை 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தி இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக பயணிக்க வழிவகுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து, 7 மீட்டர் அகலமுள்ள 2.8 கிமீ நீள சாலையினை 10 மீட்டர் சாலையாக மாற்ற ரூ.3.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி மாதம் துவங்கி நடந்தது. அன்னஞ்சி பிரிவில் இருந்து சுமார் 1.6 கிமீ தூரம் வரை சாலை அகலப்படுத்தும் பணி முடிவடைந்தது. 1.6 கிமீ தூரத்தில் இருந்து ரிசர்வ் பாரஸ்ட் எல்லை துவங்கும் நிலையில் தற்போது சாலை அகலப்படுத்தும் பணியை செயல்படுத்தக் கூடாது வனத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் அன்னஞ்சி பிரியில் துவங்கி 1.6 கிமீ தூரத்தில் இருந்து சாலை அகலப்படுத்தும் பணி துவங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.

பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு 24 மீட்டர் அகல சாலை உள்ளது. இதற்கான பவுண்டரி கல் ஏற்கனவே ஊன்றப்பட்டுள்ளது. இந்த பவுண்டரிக்குள்ளேதான் தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால் திடீரென வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி சாலைபோட முட்டுக்கட்டையிடுவதால் பணிகள் அரைகுறையாக பாதியில் நிற்கிறது. பைபாஸ் சாலையில் அதிக விபத்து ஏற்பட்டு வரும்நிலையில் இச்சாலையை அகலப்படுத்துவது என்பது இன்றியமையாததாக உள்ளது. விபத்துக்களை தவிர்க்க இச்சாலையை அகலப்படுத்துவதில் வனத்துறை ஏற்படுத்தும் முட்டுக்கட்டையை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: