வாலிபரை கொலை செய்த சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பு

நாகர்கோவில், ஏப். 12:  நாகர்கோவிலில் வாலிபரை வெட்டி கொலை செய்த சகோதரர்கள் 3பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நாகர்கோவில் தம்மத்துக்கோணம் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(32). அப்பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் வளர்நகரில் உள்ள கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வகுமார் ஆத்திரத்தில் செல்வராஜின் கையை முறித்துள்ளார். மேலும் செல்வராஜின் பைக்கையும் உடைத்தார். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தந்தையின் கையை முறித்த செல்வகுமார் மீது செல்வராஜின் மகன்கள் மணிகண்டன்(23), ஐயப்பன்(24), பாபு(26) ஆகியோர் ஆத்திரத்தில் இருந்தனர்.

 இந்த நிலையில் கடந்த 9.6.2011ம் தேதி செல்வகுமார் தம்மத்துக்கோணம் ஜங்சனில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன், ஐயப்பன், பாபு ஆகியோர் பைக்கில் அங்கு வந்தனர்.  செல்வகுமாரை வழிமறித்த அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜரானார்.  வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட அண்ணன் தம்பிகள் 3 ேபருக்கும் கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், தலா ₹5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். இதே போல் தடுத்து நிறுத்தல்(341) என்ற வழக்குக்காக 6 மாதம் சிறை தண்டனையும், ₹500 அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: