வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில், மே 3: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. வெயிலினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மேலும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே வருபவர்களில் பலர் வெயிலின் தாக்கத்தால், பாதிக்கப்பட்டும் வருகின்றனர். மேலும் வெளியே வருபவர்கள் நிழல் இருக்கும் இடங்களில் இழைப்பாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அதில் ஒரு சில நிழற்குடைகள் மட்டுமே உள்ளன, மற்றவை அகற்றப்பட்டுள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நிழற்குடைகள் இல்லாத பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் வழியாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், ஈத்தாமொழி, மணக்குடி, ராஜாக்கமங்கலம், திங்கள்சந்தை மார்கமாக செல்லும் பஸ்கள் பல செல்கிறது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல பல பயணிகள் இங்கு நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். இதனால் எப்போதும் இந்த பஸ் நிறுத்தம் பரபரப்பாக காணப்படும். கடந்த காலத்தில் அந்த பஸ் நிறுத்தத்தையொட்டி நிழற்குடை இருந்தது. ஆனால் தற்போது இல்லை. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பயணிகள் தங்களை பாதுகாத்துகொள்ளும் வகையில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: