மார்த்தாண்டத்தில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜ. கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது 6 பிரிவுகளில் வழக்கு

 

மார்த்தாண்டம், மே 5: மார்த்தாண்டத்தில் சப் இன்ஸ்பெக்டரின் சீருடையை பிடித்து இழுத்து தாக்கிய நாகர்கோவில் மாநகராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

பம்மம் மேம்பாலம் பகுதியில் போலீசார் வந்த போது, நாகர்கோவில் மாநகராட்சி 12 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் வடசேரி வெள்ளாளர் கீழத்தெருவை சேர்ந்த சுனில்குமார் (35), நாகர்கோவில் கீழ ரத வீதியை சேர்ந்த சுரேஷ் (52), நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பு பகுதியை சேர்ந்த சிவ சிதம்பரம், தோவாளையை சேர்ந்த கார் டிரைவர் விஸ்வா ஆகியோர் அந்த வழியாக வந்த டாரஸ் லாரிகள் மற்றும் வாகனங்களை சிறை பிடித்து தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, எஸ்.ஐ. பெனடிட் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தகராறு செய்து கொண்டிருந்தவர்களை விலக்கி, போக்குவரத்துக்கு இடையூறு செய்யாதீர்கள் என கூறி அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் தகராறில் ஈடுபட்டு இருந்தவர்கள் நாங்கள் யார் தெரியுமா? எங்களை எப்படி நீ விரட்டுவாய் என கேட்டு போலீசாருடன் தகராறு செய்தனர்.
அப்போது சுனில்குமார் திடீரென எஸ்.ஐ. பெனடிட் சீருடையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவதூறாகவும் பேசினார். மற்றவர்களும் சேர்ந்து எஸ்.ஐ. பெனடிட்டை மிரட்டி இருக்கிறார்கள். அங்கிருந்த மற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து எஸ்ஐ. பெனடிட்டை அந்த கும்பலின் பிடியில் இருந்து காப்பாற்றினர். உடனடியாக தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் கார் டிரைவர் விஸ்வா வேகமாக தப்பி சென்றார்.

கவுன்சிலர் சுனில்குமார், சுரேஷ், சிவ சிதம்பரம் ஆகிய 3 பேரை பிடித்து, மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் எஸ்.ஐ. பெனடிட் அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 341, 353, 323, 332, 506 (ii) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுனில்குமார், சுரேஷ், சிவ சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விஸ்வாவை தேடி வருகிறார்கள். இரவில் நடுரோட்டில் தகராறு செய்து கொண்டிருந்ததை தட்டி கேட்ட சப்.இன்ஸ்பெக்டரை, பாஜ கவுன்சிலர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மார்த்தாண்டத்தில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜ. கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது 6 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: