குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் வெப்ப சிகிச்சை வார்டு திறப்பு 10 படுக்கை வசதிகள் ஏற்பாடு

நாகர்கோவில், மே 4: குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் வெப்ப சிகிச்சை வார்டு தனியாக திறக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப நிலை அதிகரித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இங்கு தேவையான முதலுதவி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நகரங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் இன்று (4ம்தேதி) தொடங்குகிறது. வெயில் கொடுமை இன்னும் அதிகரிக்கும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் பத்து படுக்கைகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சை பிரிவை குமரி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. நமது உடலில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் போது தான் காய்ச்சல் என்கின்றோம். சாதாரண காய்ச்சலுக்கும் உடல் வெப்பநிலை அதிகரித்து ஏற்படும் உடல் சூட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நமது மூளையில் ஹைப்போ தலாமஸ் என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதி தான் கபச்சுரப்பின் வழியாக நரம்பு தொகுதியை இணைப்பது ஆகும். நரம்பு பகுதிகளை தேவையான தன்மையுடன் இயங்க செய்யும். உடல் வெப்ப நிலையை அதிகரிக்கும் போது ஹைப்போ தலாமஸ் செயல்பாடு மாறுப்பட்டு நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.

இதனால் தான் அதிக வெப்ப நிலையில் பக்கவாதம் உள்ளிட்டவை வருகிறது. கடும் வெயிலில் பணியாற்ற கூடிய தொழிலாளர்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகலாம். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க உடல் வெப்ப நிலை சீராக இருக்க வேண்டும். அவ்வாறு உடல் வெப்பம் அதிகரித்து ஏற்படும் சூட்டை தணிக்கும் வகையில் சிகிச்சை அளிப்பதற்காக குளிர்விப்பு தன்மையுடன் கூடிய வசதியுடன் சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் பத்து படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் தொடர்ந்து நோயாளி ஆபத்தான நிலையில் இருந்தால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதனால் அதி தீவிர சிகிச்சை பிரிவு வார்டு அருகில் இந்த சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

n உடல் வெப்பம் அதிகரித்து ஏற்படும் சூட்டை தணிக்கும் வகையில் சிகிச்சை அளிப்பதற்காக குளிர்விப்பு தன்மையுடன் கூடிய வசதியுடன் சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
n அதி தீவிர சிகிச்சை பிரிவு வார்டு அருகில் இந்த சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

The post குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் வெப்ப சிகிச்சை வார்டு திறப்பு 10 படுக்கை வசதிகள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: