மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மீன பரணிக்கொடை

குளச்சல், ஏப்.9 : பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை கடந்த மாதம் 3ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 12ம்தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.  19ம்தேதி எட்டாம் கொடை நடந்தது. இதையடுத்து மீனபரணிக்கொடை நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 11 மணியளவில் கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் குருக்கள் இல்லத்தில் இருந்து 150 குடங்களில் சந்தன பவனி, நண்பகல் 12.15 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 1 மணியளவில் வலியபடுக்கை பூஜை நடந்தது.

 வலியபடுக்கையின்போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்கள் ஆகியவை பெருமளவில் அம்மன் முன் படைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6ம் நாளன்றும், அம்மன் பிறந்த நட்சத்திரம் என கருதப்படும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும், கார்த்திகை மாத கடைசி  வெள்ளிக்கிழமை அன்றும் என ஆண்டுக்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. மீனபரணிக்கொடையை முன்னிட்டு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: