அய்யர்மலை பாப்பக்காபட்டியில் மகா மாரியம்மன் கோயில் திருவிழா

தோகைமலை, மார்ச் 29:அய்யர்மலை அருகே பாப்பக்காபட்டியில் நடந்த மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே பாப்பக்காபட்டி மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூச்சொரிதல் விழாவுடன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு தொடர்ந்து 15 நாட்கள் கிராம மக்கள் விரதம் இருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற மண்டகப்படி விழாவையொட்டி முத்து பல்லக்கு மற்றும் சிறப்பு வாகனங்களில் மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்தார். அதனை தொடந்ந்து 15வது நாள் மாரியம்மனுக்கு குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பால், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, தேன் திருமஞ்சனம், புனித தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் செய்தனர்.

அன்று இரவு மகா மாரியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் மகா மாரியம்மனும், முத்து பல்லக்கில் பகவதியம்மனும் கரகாட்டம், காவடி ஆட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா வந்து கோயிலை அடைந்ததும் சிறப்பு அபிசேகம் நடந்தது. அடுத்த நாள் காலை 1008 சிலா போடுதல், அக்னி சட்டி எடுத்தல், தேவராட்டம், சரம் குத்துதல், படுகளம் விழுதல் மற்றும் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. அதனை தொடா;ந்து நிறைவு நாளன்று மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்து விடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர் டாக்டர் பார்த்தீபன், கோயில் அறங்காவலரும், முன்னாள் பாப்பக்காபட்டி ஊராட்சி தலைவருமான இளங்குமரன், மற்றும் 8 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Related Stories: