கிராமங்களில் வருடக்கணக்கில் எரியாத தெருவிளக்குகள் இருட்டில் தவிக்கும் மக்கள்

சிவகங்கை, மார்ச் 26:  சிவகங்கை அருகே ஏராளமான கிராமங்களில் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் கிராமத்தினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை அருகே நாமனூர், கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, அழகமாநகரி, கட்டாணிபட்டி, பிரவலூர், அலவாக்கோட்டை, சோழபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எரியவில்லை. தெரு விளக்குகள் ஊராட்சி மன்றங்கள் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவர் மற்றும் பிரதிநிதிகள் இருந்தபோது ஊராட்சி மன்றத்தில் நிதி வழங்கப்பட்டு தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது ஊராட்சி நிதி ஒதுக்கும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனி அலுவலரிடம் உள்ளது. தெரு விளக்குகளை அருகாமை ஊர்களில் உள்ள மின்சார பணிகள் செய்யும் தனியார் பராமரித்து வருகின்றனர். இவர்கள் பணியை முடித்தவுடன் நிதி வழங்கப்படாமல் ஊராட்சியில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக கோப்புகள் செல்கின்றன. அதன் பின்னர் வேலைக்கான நிதி வழங்கப்படுகிறது. இதற்கு சுமார் மூன்று மாதம் ஆகிறது. இதனால் தனியார் வேலையாட்கள் இப்பணியை செய்ய விரும்புவதில்லை.

இதனால் யாருமே கண்டுகொள்ளாமல் ஆண்டுக்கணக்கில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. எனவே மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கிராமத்தினர் கூறுகையில், ‘‘உள்ளாட்சி அமைப்பு இல்லாததால் கிராமங்களில் தெருவிளக்குகள் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்றன. கம்பங்களில் விளக்குகளையும் டூம் மூலம் பொருத்தாமல் வயரின் இழுநிலையிலேயே தொங்கவிட்டு செல்கின்றனர். இதனால் விரைவில் வயர், விளக்குகள் பழுதடைந்து விடுகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தெருவிளக்குகள் இப்பகுதியில் எரியாமல் இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மழைக்காலம் என்பதால் கிராமங்களில் இரவு நேரங்களில் நடந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. இதனால் திருட்டு சம்பவங்களும் இப்பகுதியில் அதிகரித்துள்ளன. எனவே உடனடியாக தெரு விளக்குகளை பராமரித்து எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: