அறந்தாங்கி நகரில் காட்சி பொருளான சிக்னல்கள் மஞ்சள் கலர் லைட் மட்டும் எரிவதால் வாகன ஓட்டிகள் குழப்பம்

அறந்தாங்கி, மார்ச்22: அறந்தாங்கி நகரில்  அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள், அமைக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒருநாள் கூட இயங்காமல் காட்சி பொருளாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி 2வது பெரியநகராக விளங்குகிறது. அறந்தாங்கி நகரில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், திருப்பதி, மதுரை, நாகர்கோவில், நெல்லை, திருச்செந்தூர், பழனி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம், குமுளி, ஈரோடு, ராமேஸ்வரம், மேட்டுப்பாளையம், சிவகங்கை, முதுகுளத்தூர், பட்டுக்கோட்டை, திருவெற்றியூர், திருவாடாணை, காரைக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு நீண்ட தூரப் பேருந்துகளும், அறந்தாங்கியை சுற்றியுள்ள ஊர்களுக்கு  நகர பேருந்துகளும் இயங்கி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் அறந்தாங்கியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயங்கி வருகின்றன. மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி பகுதிகளிலிருந்து ஏராளமான மீன் உணவு, கருவாடு ஏற்றிச்செல்லும்  வாகனங்கள் அறந்தாங்கி வழியாக செல்கின்றன. இது தவிர தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அறந்தாங்கி வந்து, பின்னர் திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றன. மேலும் அறந்தாங்கி நகருக்குள் தினசரி ஆயிரக்கணக்கான இலகு ரக மற்றும் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்கள் நகரின்  முக்கிய  சாலைகளான கட்டுமாவடிசாலை, பேராவூரணிசாலை, பட்டுக்கோட்டை சாலை, காரைக்குடிசாலை, ஆவுடையார்கோவில் சாலை, புதுக்கோட்டை சாலை வழியாக சென்று வருகின்றன. அதிகப்படியான வாகனங்கள் அறந்தாங்கி நகருக்குள் வந்து செல்வதால், அறந்தாங்கி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறந்தாங்கி  நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசிலை, கட்டுமாவடி முக்கம், பெரியகடைவீதி, செக்போஸ்ட் ஆகிய 4 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டது. சிக்னல் அமைக்கப்பட்டதால், அறந்தாங்கி நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்ததுடன், பைக்கில் வந்த குற்றவாளிகள் சிலரும் போலீசாரிடம் சிக்கினர். இந்த நிலையில் நாளடைவில் சிக்னல்கள் பழுதடைந்ததால், அதை சீரமைத்து மீண்டும் இயக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த சிக்னல்கள் சேதமடைந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு அறந்தாங்கி நகரில் அண்ணாசிலை, கட்டுமாவடி முக்கம், பெரியகடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதான சிக்னல்கள் அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் கம்பிகள், சிக்னல்களுக்கு மின்சாரம் கொண்டு வரும் கம்பிகள் போன்றவற்றில், தனியார் விளம்பர பதாகை அமைக்கப்பட்டன. இந்த சிக்னல்களில் விளம்பர பதாகை  அமைக்க, அறந்தாங்கி நகராட்சி சார்பில் உரிய அனுமதி பெறப்படவில்லை. நகராட்சி அனுமதி பெறப்படாமலேயே சிக்னல் கம்பிகளில் போலீசாரின் உதவியுடன் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டன. இந்த பதாகை  ஒவ்வொன்றும் மாதாந்திர வாடகை அடிப்படையில், ஒப்பந்த நிறுவனம் வசூலிக்கிறது. சிக்னல் அமைத்து சுமார் 2 ஆண்டுகள் ஆனநிலையில், அது அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ஒரு நாள் கூட சிக்னல் செயல்பாட்டிற்கு வரவில்லை. அன்று மஞ்சள் லைட் மட்டும் விட்டு விட்டு எரிகிறது. மற்ற எந்த லைட்டும்  எரியவில்லை. ஆனால் போக்குவரத்து சிக்னல் என்ற பெயரில் தனியார் நிறுவனம் விளம்பர  பதாகை அமைத்து வருமானம் பார்ப்பதற்காகவே அறந்தாங்கியில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டதாகவே தெரிகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: அறந்தாங்கி நகரில் பொருத்தப்பட்ட சிக்னல்களால் காவல்துறையில் உள்ள  ஒரு சிலருக்கு வருமானம் வருவதால், அவர்களும் சிக்னலை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மேலும் இந்த சிக்னல் அமைக்கப்பட்டு, விளம்பர பதாகை  பொருத்தப்பட்டதில் மிகப்பெரிய தொகை லஞ்சமாக சிலருக்கு கைமாறி உள்ளதாக தெரிகிறது. சிக்னல் அமைக்கப்பட்டதற்கு தங்களிடம் காவல்துறை அனுமதி பெறவில்லை என அப்போதைய நகராட்சி ஆணையர் நவேந்திரன் கூறியிருந்தார். நகராட்சி அனுமதி பெறாமல் இயங்காத சிக்னல்களில், விளம்பர பதாகைகளை மட்டுமே அடிக்கடி  மாற்றி வருகின்றனர். இனிமேலாவது மாவட்ட காவல்துறை  நிர்வாகம் அறந்தாங்கியில் அமைக்கப்பட்ட நாளில் இருந்து செயல்படாமல் உள்ள சிக்னல்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிக்னல் அமைக்கப்பட்டதில் ஏதேனும் முறைகேடு நடைபெற்று இருந்தால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: