செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்

ஆலத்தூர், மார்ச் 22: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று நடந்த பங்குனி உத்திர தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் செட்டிகுளத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த  13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மலையில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார வழிபாடும் நடைபெற்றது. இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. கடந்த 19ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்றுமுன்தினம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனம், வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் காவடி மற்றும் பால் குடம் எடுத்தும், அலகு குத்தி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  தொடர்ந்து முருகன் வள்ளி, தெய்வானை சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Stories: