பெண் குழந்தைகள் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் சேர ஏப்.1க்குள் விண்ணப்பிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு

காரைக்கால், மார்ச் 22:  தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயன்பெறுவோர், உரிய நகல்களை ஏப்ரல் 1 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லி அறிவித்துள்ளார். இது குறித்து, காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும்போது, தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலை கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயனடைய விண்ணப்பித்த அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவியருக்கு மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது விண்ணப்பித்தோரில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் மட்டும் திட்ட உதவியாக ரூ.3 ஆயிரம் மற்றும் வட்டி தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. எனவே, காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலுள்ள ஊக்க தொகை பிரிவில் ஏப்ரல் 1ம் தேதி மாலை 5 மணிக்குள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் நகல் 2, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி. எண்ணுடன் நகல் -2, தனி நபர் ஆதார் எண் நகல் - 2 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: