செல்போன் செயலி மூலம் தேர்தல் பிரச்சார அனுமதி

சிவகங்கை, மார்ச் 21: செல்போன் செயலி மூலம் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பணி குறித்த கூட்டம் நடத்துவது மற்றும் வாகன அனுமதி குறித்த அனுமதிச் சான்று பெறுதல் தொடர்பாக செயல்பட்டு வரும் செயலி மற்றும் ஒற்றைச்சாளர முறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்பி ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசுகையில், சிவகங்கை மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கான வாகன அனுமதி, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி மற்றும் தேர்தல் அலுவலகங்கள் அமைத்திடுவதற்கான அனுமதி பெறுவதற்கு ஒற்றைசாளர முறையிலும் மற்றும் நேரில் விண்ணப்பம் அளித்தும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்பொழுது சுவிதா செயலி மூலமும் அனுமதி ஆணை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் எத்தனை வாகனங்களுக்கு வேண்டுமானாலும் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அதற்குரிய செலவினம் அவர்களது செலவு கணக்கில் சேர்த்து கண்காணிக்கப்படும். அனுமதி பெறாமல் வாகனங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கான வாகன அனுமதி மற்றும் பொதுக்கூட்டங்கள் உட்பட அனைத்து அனுமதிகளும் பெற சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் விண்ணப்பித்தோ அல்லது ஒற்றைச்சாளர முறையிலும் மற்றும் சுவிதா செயலியில் இணையதள வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: