கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

குமாரபாளையம், மார்ச் 19: கல்லங்காட்டு வலசு கிராமத்தில் கூலி உயர்வு வழங்க கோரி, விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டு வலசு கிராமத்தில், 50 விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு அதிக அளவில் துண்டுகள் நெய்யப்பட்டு வருகிறது. குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 2 வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், கல்லங்காட்டு வலசு கிராமத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று இங்குள்ள 6 விசைத்தறி கூடங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால், 6 பட்டறைகளின் வேலை நிறுத்தம் மெல்ல மற்ற பட்டறைகளுக்கும் பரவியது. இதனால் திறக்கப்பட்ட மேலும் 6 பட்டறைகளில் உள்ள தொழிலாளர்களும், வேலை நிறுத்த போராட்த்ததில் பங்கெடுத்தனர். நேற்று மாலையில் அங்குள்ள 50 விசைத்தறி பட்டறைகளில் 12 பட்டறைகள் இயங்கவில்லை.

வேலைக்கு செல்லாத விசைத்தறி தொழிலாளர்கள், நேற்று மாலை மெயின்ரோடு பகுதியில் திரண்டனர். அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால், விசைத்தறி சங்க மாவட்ட நிர்வாகிகள் பாலுசாமி, முருகேசன் உள்ளிட்டோர் பேசினர். கூலி உயர்வு வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் வழியுறுத்திய தொழிலாளர்கள், தங்கள் பிரச்னையில் அரசு அதிகாரிகள் தலையிட்டு பேச வேண்டுமென வலியுறுத்தினர்.

Related Stories: