கலெக்டர் அலுவலகத்தில் சேதமடைந்த கழிப்பறையால் ஊழியர்கள், மக்கள் அவதி

கரூர், மார்ச் 19: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம் கதவு உடைந்த நிலையில் உள்ள கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகம் எதிரே ஆண்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த கழிப்பறை பயன்பாடின்றி மூடப்பட்ட நிலையில் இருந்தது.

பூட்டு போட்டு மூடப்பட்டிருந்த கழிப்பறை கதவின் கீழ்ப்புற பகுதி முழுவதும் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் உள்ளது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. திறந்த நிலையில் கழிப்பறை வளாகம் இருப்பதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேவையான அளவு கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே இந்த கழிப்பறையை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: