சமுதாய கூடத்தில் வைத்திருந்த கஜா புயல் நிவாரண பொருட்களை மக்கள் அள்ளி சென்றதால் பரபரப்பு வேடிக்கை பார்த்த அதிகாரிகள்

முத்துப்பேட்டை, மார்ச்6: முத்துப்பேட்டை அருகே  தில்லைவிளாகம் சமுதாய கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்கள் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தடுக்காமல்  அதிகாரிகள் வேடிக்கை பார்த்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதியில் கடந்த நவம்பர் 15ம்தேதி அடித்த கஜா புயலின் கோரதாண்டவத்தால்   இப்பகுதி மக்களின்  குடியிருப்புகள், தென்னை மரங்கள், மீன்பிடி படகுகள் ,விவசாய பயிர்கள் ஆகியன சேதமடைந்தது மட்டுமின்றி உடமைகள் வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். அரசு அறிவித்த கஜா நிவாரணம் மற்றும் தொகுப்பு பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த  தில்லைவிளாகம் ஊராட்சி பகுதியில்  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில்  ஏராளமானவர்களுக்கு நிவாரண பொருட்கள்  வழங்கப்பட வில்லை. இதனால் விடுபட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சென்ற மாதம் இப்பகுதியில் விடுபட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர்  உதவியுடன் திருவாரூரிலிருந்து  ஒரு லாரியில் பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஒரு தனியார் இடத்தில்  இருப்பு வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் அரசின் நிவாரண பொருட்களை இடம் மாற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து  விஏஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உதவியுடன் அங்கிருந்து நிவாரண பொருட் களை மீட்டு எடுத்து சென்று தில்லைவிளாகம் பேரிடர் மைய கட்டிடத்தில் வைத்தனர்.  இது வரை  மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்க அதிகாரிகள் முன் வரவில்லை. பலமுறை அதிகாரிகளிடம்  கேட்டு  நடவடிக்கை எடுக்கப்படாதால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

அங்கு இருப்பிலிருந்த பொருட்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் நேற்று முன்தினம் சரிபார்த்து கொண்டிருந்தனர்.அப்போது அதிரடியாக  உள்ளே புகுந்த தெற்குகாடு பகுதி மக்கள் அங்கிருந்த பொருட்களை தங்களுக்கு  தேவையானதை  அள்ளிச்சென்றனர். எங்களுக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய பொருட்களை நீங்கள் தரவில்லை. அதனால் நாங்களே எடுத்துச்செல்கிறோம் என அதிகாரிகளிடம் தெரிவித்த பொதுமக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து  சென்றனர். இதை அதிகாரிகளும் தடுக்கவில்லை. எப்படியோ பொருட்கள் வெளியானால் போதுமென வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் என்றார். அதிகாரிகள் முன்னிலையில்  நிவாரணப்பொருட்களை  பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: