தமிழகம் முழுவதும் மாமரங்களில் காய்ப்பு அமோகம்

சேலம், பிப்.21: தமிழகம் முழுவதும் மாமரங்களில் காய்ப்பு நல்லமுறையில் பிடித்துள்ளதால், இந்தாண்டு விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை, குதாதத் உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிகளவில் விளைகின்றன. இங்கு பறிக்கப்படும் மாம்பழம் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் மாமரங்களில் நல்லமுறையில் பூ பூத்து உள்ளன. இவ்வாறு பூ பூத்துள்ள ஒரு சில மரங்களில் காய்ப்பு நல்லமுறையில் பிடித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சேலம் மா விவசாயிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், வலசையூர், ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் உள்ளன. இந்த மரங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் பூ பூக்க ெதாடங்கும்.

 நடப்பாண்டு பூ பூக்கும் நேரத்தில் காற்றுடன் கூடிய மழை இல்லை. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மாமரங்களில் நல்லமுறையில் பூ பூத்துள்ளது. இவ்வாறு பூ பூத்துள்ள ஒரு சில மரங்களில் மாம்பழங்கள் விளைந்துள்ளது. மார்ச் 25ம் தேதிக்கும் மேல் மாம்பழங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டு 20 முதல் 30 சதவீதம் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றனர்.

Related Stories: