திருபுவனத்தில் நெசவாளர்களுக்கு ரூ.2.75 கோடி முத்ரா கடன்

கும்பகோணம், பிப். 20: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ரூ.2.75 கோடி முத்ரா கடனை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.

550 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.75 கோடி முத்ரா கடன் வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிற ஒரு சங்கமாக திகழ்கிறது. நெசவாளர்கள் தங்கள் உற்பத்தியை உலகளாவிய தரத்தில் தயார் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த நெசவு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி கைத்தறி நெசவு தொழிலை தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. திருபுவனத்தில் வாங்கும் பட்டுப்புடவை தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் நெசவாளர்கள் செயல்பட வேண்டும்.

தமிழகத்தை சேர்ந்த நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து கோயம்புத்தூரில் நெசவு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுபோல் கைத்தறி வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கடந்தாண்டு ரூ.25 கோடி, இந்தாண்டு ரூ.40 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார். மயிலாடுதுறை எம்பி பாரதிமோகன், முன்னாள் எம்எல்ஏ ராம்குமார், தவமணி, திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு இணை இயக்குநர் மகாலிங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல மேலாளர் லட்சுமிநரசிம்மன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: