6 ஆண்டுகளுக்கு பின் குடந்தை பொற்றாமரை குளத்தில் மாசிமக விழா தெப்ப உற்சவம்

கும்பகோணம், பிப். 20: கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் நடந்தது.

மாசி மகத்தையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும 7 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது 6 நாட்கள் கோயிலுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடு நடைபெறும். இறுதி நாளான மாசி மகத்தன்று கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக பொற்றாமரை குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலை தெப்ப விழா நடந்தது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து பல லட்ச ரூபாய் செலவில் போர்வெல் மூலம் ராட்சத மோட்டார் அமைத்து தெப்ப குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.

இதையடுத்து நேற்று பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவ விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலையில் தெப்ப உற்சவமும், இரவில் மின்னொளி அலங்காரத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: