அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் பிஎட் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை, பிப். 20: தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கும் விதமாக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் பணி நியமனம் நடந்து வருகிறது. தற்சமயம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

மேலும் ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த தகுதி சான்றிதழ் செல்லுபடியாகும். தற்சமயம் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 6 ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் ஓராண்டுக்குள் பணி வழங்கினால் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும். இல்லையேல் அந்த சான்றிதழ் மதிப்பிழந்துவிடும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி 2013ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: