திருமயம் அருகே புயலால் சாய்ந்த தடுப்புகளை சரி செய்யாமல் அப்புறப்படுத்திய நெடுஞ்சாலைத்துறை விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்பு மீண்டும் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருமயம், பிப். 15: திருமயம் அருகே புயலால் சாய்ந்த சாலை தடுப்புகளை சரி செய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தியதால் விபத்து நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி வீசிய கஜா புயலில் திருமயம், அரிமளம் பகுதி நெடுஞ்சாலையோரம் இருந்த பலவகை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் விபத்தை தடுப்பதற்காக சாலையோரம் நடப்பட்டிருந்த சாலை தடுப்புகள் சேதமடைந்தது. மேலும் ஊர் பெயர், பலகை கைகாட்டிகளும் ஆங்காங்கே உருக்குலைந்து காணப்பட்டது.இதனிடையே புயல் பாதித்து இன்றுடன் 2 மாதங்களுக்கு மேலான நிலையில் சேதமடைந்த சாலை தடுப்புகள், கைகாட்டிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சேதமடைந்த இரும்பு சாலை தடுப்புகள் திருட்டுபோக வாய்ப்புள்ளதோடு அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகை கைகாட்டிகள் காற்றடிக்கும்போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

எனவே இந்த விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட சாலை தடுப்புகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வைத்த கோரிக்கை செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயத்தில் இருந்து ராயவரம் செல்லும் சாலையில் வேங்கை கண்மாய் கரையில் சேதமடைந்திருந்த சாலை தடுப்புகள், கைகாட்டிகளை சரி செய்யாமல் அப்புறப்படுத்தினர்.இதேபோல் புதுக்கோட்டையில் அரிமளம் செல்லும் சாலையில் பெருங்குடி விலக்கு அருகே விபத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சாலை தடுப்புகளும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் சாலை விபத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சாலை தடுப்புகளை அகற்றியதால் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே திருமயம், அரிமளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு அகற்றப்பட்ட சாலை தடுப்புகளை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு சேதமடைந்த சாலை தடுப்புகளை உடனே சரி செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: