அரக்கோணம் அருகே பரபரப்பு பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

அரக்கோணம், பிப். 15:அரக்கோணம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு, லோகநாதன், பாலகிருஷ்ணன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான நிலத்தை தங்களுடைய பெயருக்கு, பட்டா மாற்றம் செய்து தரக்கோரி அவரது மகன்கள் லோகநாதன், பாலகிருஷ்ணன் வருவாய்துறையினரிடம் விண்ணப்பித்தனர்.இதையடுத்து, மோசூர் விஏஓ திவாகரிடம் பலமுறை பட்டா பெயர் மாற்றம் செய்து தரக்கோரி லோகநாதன் கேட்டுள்ளார். அதற்கு இன்றுவா, நாளைவா? விஏஓ என கூறி அலைக்கழித்தாராம்.

இதற்கிடையில், பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹12 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என விஏஓ திவாகர் கேட்டாராம். பேச்சுவார்த்தைக்கு பின் ₹10 ஆயிரம் பெற்றுக்கொள்ள விஏஓ ஒத்துக்கொண்டாராம். இதையடுத்து, 2 தினங்களில் பணத்துடன் வருவதாக லோகநாதன் தெரிவித்தாராம்.ஆனால், லஞ்சம் கொடுப்பதற்கு லோகநாதன் மற்றும் பாலகிருஷ்ணனுக்கு விருப்பமில்லையாம். எனவே, இதுபற்றி வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் நேற்றுமுன்தினம் லோகநாதன் புகார் செய்தார்.இதையடுத்து, ரசாயனம் தடவிய ₹10 ஆயிரத்தை லோகநாதனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்துள்ளனர். விஏஓ அலுவலகத்திற்கு நேற்று சென்ற லோகநாதன் ₹10 ஆயிரத்தை விஏஓ திவாகரிடம் கொடுத்தார்.அப்போது, அங்கு மறைந்திருந்த வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் விஜய், பி.விஜயலட்சுமி, எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் விஏஓ திவாகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ சிக்கிய சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: