காரைக்குடி பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

காரைக்குடி, பிப். 14: காரைக்குடி பகுதியில் முன்பின் அறிமுகம் இல்லாத வெளி மாநில நபர்கள் கட்டுமான தொழிலாளர்கள் என்ற பெயரில் அதிகளவில் நடமாடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காரைக்குடி பகுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளதால், மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் பெரும்பாலான வீடுகளில் முதியோர்களே உள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு திருடர்கள் பகல் நேரங்களில் தங்களின் கைவரிசையை காட்டி வருகின்றனர். தற்போது இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடக்கிறது. இப்பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களை விட வடமாநில தொழிலாளர்களே வேலை பார்க்கின்றனர்.

வடமாநில தொழிலாளர்களுக்கு கூலி குறைவு என்பதாலும், இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாலும், கட்டிட கான்டிராக்டர்கள் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் ஆட்களை அழைத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இப்பகுதியில் முகாமிட்டு வேலைபார்த்து வருகின்றனர். தவிர காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் உள்ள அரிசி ஆலைகள், காரைக்குடியில் உள்ள பேக்கரி மற்றும் சிறிய, பெரிய அளவிலான தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்களே வேலை பார்க்கின்றனர்.

இப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறு சிறு திருடு மற்றும் வழிப்பறி ஆங்காங்கே நடக்கிறது. எனவே தொழிலாளர்கள் என்ற போர்வையில் வடமாநிலங்களை சேர்ந்த சமூக விரோதிகளும் ஊடுருவி இருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வெளிமாநில ஆசாமிகள் குறித்து உள்ளூர் ஸ்டேசன்களில் முறையான பதிவுகள் இருக்க வேண்டும். ஆனால் போலீசார் இவர்களை கண்டுகொள்ளாததால் இவர்கள் குறித்த விவரம் தெரியாத நிலை உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர். இப்பகுதியில் சமீபகாலமாக வீடுகளின் வெளியே இருக்கும் லைட், கேஸ் சிலிண்டர்கள் திருடு போவது வாடிக்கையாக உள்ளது. தவிர ஆடு, மாடு போன்ற கால்நடைக­ளும் அடிக்கடி திருடு போகிறது. சிறிய அளவில் நடைபெறும் திருடு என்பதால் போலீசில் யாரும் புகார் தருவது இல்லை.

எனவே காவல் துறையினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும். அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். வழக்கமாக ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே சுதாரிக்கும் போலீசார் அதுபோன்று நடக்காதற்கு முன்பு சுதாரிக்க வேண்டும் என்றார்.

Related Stories: