சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்ற பெண் தாசில்தார் வழங்கினார் திருப்பத்தூரில் 10 ஆண்டுகளாக போராடி

திருப்பத்தூர், பிப்.14:திருப்பத்தூரில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெண்ணுக்கு தாசில்தார் வழங்கினார்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி தம்பதியரின் மகள் சினேகா. வழக்கறிஞரான இவர் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற 10 ஆண்டுகளாக போராடி வந்தார். இந்த நிலையில் தற்போது அதற்கான சான்றிதழை பெற்றுள்ளார்.இதுகுறித்து சினேகா கூறியதாவது: காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாக சிநேகா என எனது பெற்றோர் எனக்கு பெயர் சூட்டினர்.பின்னர், முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம் முதலில் நான் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் பெற்றோர். இப்படி தான் தொடங்கியது எனது வாழ்க்கை.பின்னர், பள்ளி முதல் கல்லூரி வரை எந்த ஆவணத்திலும் சாதி, மதம் குறிப்பிட்டதில்லை. சாதி சான்றிதழும் இல்லை. என் தங்கைகள் மும்தாஜ் சூரியா, ஜெனிபர். அவர்களையும் இதேபோல் பள்ளியில் எந்த ஜாதி, மதம் இல்லை என்று கூறி பெற்றோர் சேர்த்தனர்.

பின்னர், எனக்கு 20 வயதில் கி.பார்த்திபராஜா உடனான என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம். பின்னர், எங்களுக்கு ஆதிரை நஸ்ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயரிட்டு எங்கள் 3 மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்த்து வருகிறோம். நான் தற்போது திருப்பத்தூரில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன்.சாதி சான்றிதழை கேட்கும் அனைத்து அமைப்பிற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி, மதம் அற்றவர் என எங்கள் வாழ்விற்கு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக 10 ஆண்டுகளாக கலெக்டர், சப்-கலெக்டர் என்று மனுக்களை கொடுத்து வந்தோம். ஆனால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்ைல.இந்நிலையில், தாசில்தார் சத்தியமூர்த்தியின் நீண்ட முயற்சியால் எனக்கு எந்த ஜாதியும் மதமும் இல்லை என்ற சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளது. தொடர்ந்து போராடி தற்போது இறுதியில் சாதி இல்லை மதம் இல்லை என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்று வெற்றி பெற்றுள்ளேன். மேலும், சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: