போக்சோ சட்டத்தில் தூக்கு தண்டனை கிடைக்கும் ஆதரவற்றோர் காப்பக குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பை கண்காணிக்க குழு

திருவண்ணாமலை, பிப்.1: ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு அனுமதி பெற்று 30 ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் நடந்து வருகிறது. அதில், 435 சிறுவர்கள், 732 சிறுமிகள் உட்பட மொத்தம் 1,167 பேர் தங்கியுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார் காரணமாக 3 காப்பகங்களுக்கு சீல் வைத்திருக்கிறோம். அங்கிருந்து மீட்கப்பட்ட 88 சிறுமிகள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். .

ஜவ்வாதுமலையில் அனுமதியின்றி செயல்படும் காப்பகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காப்பகங்களை தனியார் நடத்தினாலும், அதில் தங்கியுள்ள குழந்தைகளை அரசு நிர்வாகம் நேரடியாக கண்காணித்து பாதுகாக்கும். அவர்களுக்கான பராமரிப்பு முறையாக உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.குறிப்பாக, தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகளை துன்புறுத்தினால் யார் கேட்கப்போகிறார்கள், இலவசமாக காப்பகம் நடத்துகிறோம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தில் சில இடங்களில் தவறுகள் நடக்கிறது. இது போன்ற தவறுகள் தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படும். அதிகபட்சம், தூக்கு தண்டனை பெற்றுத்தரப்படும்.

தனியார் காப்பக குழந்தைகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை, அரசு பராமரிப்பு இல்லங்களில் தங்க வைத்து, நல்ல உணவு கொடுத்து, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி, இந்த சமூகத்தில் பாதுகாப்பும், அக்கறையும் செலுத்த ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த உள்ளோம். மேலும், சிறுவர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எவை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சமூகத்தின் மீதான நம்பிக்கையை அளிக்க, அந்த குழந்தைகளுக்கு அன்பும், அரவணைப்பும் அவசியம். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை வெளிப்படுத்த தயங்குகின்றனர். அச்சப்படுகின்றனர். எனவே, ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு கலெக்டரின் முகவரி எழுதப்பட்ட 3 தபால் கார்டுகளை வழங்க இருக்கிறோம்.

அதில், தங்களுடைய குறைகளை எழுதி போஸ்ட் செய்யலாம். அல்லது தங்களுடைய பள்ளி ஆசிரியர்களிடம் அளித்தால், அவை எங்களுக்கு வந்து சேரும். மேலும், குழந்தைகள் காப்பகங்களை கண்காணிக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திடீர் ஆய்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: