மெஞ்ஞானபுரத்தில் விசிக பேனர் கிழிப்பு

உடன்குடி, ஜன.25: மெஞ்ஞானபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிழிக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மெஞ்ஞானபுரம் பஜாரில் கடந்த ஏப்ரல் 14ம்தேதி அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மின்கம்பத்தில் அம்பேத்கர் படத்தை வைத்து மாலை அணிவித்தனர். சாலையின் நடுவே படம் வைத்ததற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பினரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின் அமைதியான சூழல் ஏற்பட்டது.

 கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடந்த மாநாடு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் போட்டி போட்டு பேனர் வைத்திருந்தனர். இரு நாட்களுக்கு முன் நள்ளிரவில் மர்மநபர்கள் பேனரை கிழித்ததாகவும், இதனையடுத்து போலீசார் இரவோடு இரவாக பேரை அகற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றிய விசிக பொருளாளர் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளையைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுரேந்தர்(25) என்பவர் மெஞ்ஞானபுரம் போலீசில், மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாபிரபு, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் ஆகியோர் பேனரை கிழித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து மெஞ்ஞானபுரத்தில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: