சேத்தியாத்தோப்பு மார்க்கெட் கமிட்டி திறப்பு

சேத்தியாத்தோப்பு, ஜன. 22: சேத்தியாத்தோப்பு மேல்நிலைப்பள்ளி சாலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் இயங்கி வந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படிசேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தில் சிதம்பரம்- விருத்தாசலம் சாலை அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.30கோடி மதிப்பில் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசால் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கட்டப்பட்டது. இங்கு 3,000 மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைக்க முடியும். கட்டி முடிக்கப்பட்டும் இதனை விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. தற்போது சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு எளிதில் பணம் கிடைக்க ஏதுவாக ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை விரைந்து திறக்கவேண்டும் என்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், உடனடியாக ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடலூர் விற்பனைக்குழு செயலாளர் தேவேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் கண்காணிப்பாளர் சிற்றரசு முன்னிலையில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விவசாயிகள் பயனடையும் வகையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனால் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் அருகில் நெல் அறுவடை செய்து வரும் விவசாயிகளுக்கு சரியான எடை, விரைவாக பணம் கிடைத்தல் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

Related Stories: