தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கஜா புயலால் பாதித்தவர்களுக்கு ரூ.123.27 கோடி நிவாரணம்

தஞ்சை, டிச. 18: கஜா புயலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.123.27 கோடி நிவாரண உதவித்தொகை  வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கஜா  புயலால் தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான  நெற்பயிர்கள், வீடுகள் சேதமடைந்தது. கஜா புயலால் உயிரிழந்த 15 பேரின்  வாரிசுதார்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,16,421 வீடுகளின் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.63 கோடி நிவாரணமாக அவர்களது  வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மற்ற  பாதித்த குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி நடந்து  வருகிறது. கஜா புயலின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட  குடும்பங்கள், படகுகள், கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்த மீனவ  குடும்பங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார  நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வீதம் 80,446 குடும்பங்களுக்கு ரூ.40.22 கோடி வங்கி  மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 27 வகையான நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டுள்ளது. புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் நிவாரணமாக வழங்க  இரண்டு கட்டமாக ரூ.1.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாலுகா வாரியக  பிரித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

 

படகுகள், வலைகள்,  மீன்பிடி வலைகளுக்கு ரூ.17.08 கோடி நிவாரணத்தொகையாக 3847 மீனவர்களுக்கு  விடுவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர்கள், தோட்ட பயிர்கள், தென்னை மரங்கள்  ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்க முதல்கட்டமாக ரூ.165 கோடி பெறப்பட்டுள்ளது.  நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து 237 தென்னை விவசாயிகளுக்கு ரூ.33 லட்சம்  நிவாரணத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: