ஆரணியில் வக்கீல்களை அவமதித்ததாக கூறி டிஎஸ்பியை கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு போலீசாரை நீதிமன்றத்தில் அனுமதிக்காததால் பரபரப்பு

ஆரணி, டிச.18: ஆரணியில் புகார் அளிக்க சென்ற வக்கீல்களை டிஎஸ்பி அவமதித்ததாக கூறி, நேற்று வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர். மேலும், நீதிமன்றத்திற்குள் போலீசாரை அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 15ம் தேதி வக்கீல் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து, ஆரணி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 25க்கும் மேற்பட்டோர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது, டிஎஸ்பி செந்தில், `நடந்த சம்பவங்கள் எல்லாம் எனக்கு தெரியும், அனைவரும் வெளியே செல்லுங்கள், கோர்ட்டுக்கு வந்தா நீங்க சொல்றத நாங்கள் கேட்கணும்னு சொல்றீங்க இல்ல, அதுபோல் காவல் நிலையத்தில் நாங்க சொல்றத தான் நீங்க கேட்கணும்'' என பேசினாராம். இதையடுத்து, தாங்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி வக்கீல்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

இந்நிலையில், நேற்று ஆரணி நீதிமன்றத்திற்கு வந்த வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டை புறக்கணித்து வெளியே நின்றபடி இருந்தனர். அப்போது ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் இருந்து வழக்கு சார்ந்த சாட்சிகளை விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்றத்தில் காத்திருந்த வக்கீல்கள், போலீசாரை நீதிமன்றம் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் வெளியேறினர்.இதற்கிடையில், வக்கீல்கள் சங்க தலைவர் தஷ்தகீர், அரசு வக்கீல் வெங்கடேசன் மற்றும் மூத்த வக்கீல்கள், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். அப்போது, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, பின்னர் முடிவெடுக்கலாம் என தீர்மானித்தனர். இதையடுத்து, வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசார் பின்னர் நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: