ஒட்டன்சத்திரம் அருகே அம்மன் கோயில் பொருட்கள் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு

ஒட்டன்சத்திரம், டிச. 12:  ஒட்டன்சத்திரம் அருகே வல்லக்குண்டாபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீர்த்தக்காவடி நடைபெறும். இதுதவிர குழந்தைவரம், கண் நோய், திருமணம் ஆகியவற்றுக்காக 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அம்மன் ஆசி பெற ஆடு, கோழி மற்றும் வாழைப்பழங்களை வேண்டுதலாக செலுத்துவார்கள். இக்கோயில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியை சேர்ந்த முருகசாமி (எ) பழனிச்சாமி, சின்னச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் கொண்ட அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

மேலும் கோயிலுக்கு சொந்தமான தங்கம், வெள்ளி, பித்தளை பொருட்களை அறங்காவலர் குழு கவனித்து வந்தது. கோயில் நிர்வாகம் மட்டும் இந்து சமய அறநிலைதுறை வசம் இருந்தது. இந்நிலையில் அறங்காவலர் குழுவினர் தங்களிடம் உள்ள கோயில் பொருட்களை அறநிலைய ஆட்சித்துறையினரிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி திண்டுக்கல்- தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் தக்கர் கணபதி முருகன் ஆகியோர் தங்கம் வெள்ளி பித்தளை பொருட்களை இயந்திர தராசுகள் மூலம் அளவிட்டு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் பொறுப்பில் எடுத்து கொண்டனர்.

Related Stories: