செல்போன் டவரை இடம் மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சேலம், டிச.11: சேலம் அருகே செட்டிச்சாவடியில் அமைக்கப்படும் செல்போன் டவரை  வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், சேலம் மாமாங்கம் ஜாகீர் பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள மயானத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். இந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் மயானத்தில் உடல்களை புதைக்க கூடாது எனவும், அங்குள்ள ஆழ்துளை கிணற்றின் தண்ணீரை பயன்படுத்த கூடாது எனவும் கூறி வருகின்றனர். எனவே, நாங்கள் அந்த மயானத்தில் உடல்களை புதைக்கவும், தண்ணீரை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

சேலம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த பிரபாவதி, தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அந்த மனுவில்,  அரசு வழங்கிய நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து, தேங்காய் மட்டை, கோழிக்கழிவுகளை கொட்டி தொல்லை அளித்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்தனர். சேலம் கன்னங்குறிச்சி செட்டிச்சாவடி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களை போலீசார் மனு கொடுப்பதற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘செட்டிச்சாவடியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் செல்போன் டவர் அமைத்து வருகின்றனர்.

அதன்மூலம் குழந்தைகள், கால்நடைகளுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் செல்போன் டவரை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்,’ என்றனர். இந்த மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

Related Stories: