சேலம் வடக்கு, மேற்கு சரக உதவி கமிஷனர்களுக்கு டி.ஜி.பி., கண்டிப்பு

சேலம், டிச.11: சேலத்தில் நடந்த   ஆய்வு  கூட்டத்தில் வடக்கு,மேற்கு சரக உதவி கமிஷனர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக டிஜிபி ராஜேந்திரன் சேலம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் சேலத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். அப்போது கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என டிஜிபி கூறினார். அதே நேரத்தில் சேலம் சூரமங்கலம் மேற்கு சரக உதவி கமிஷனரை கடுமையாக கடிந்து கொண்டார். சமீபத்தில் நடந்த 3 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையாகி விட்டனர். ஏன் என டிஜிபி கேள்வி எழுப்பினார். அதற்கு மேற்கு சரக உதவி கமிஷனர் செல்வராஜ், வழக்குகளில் தொடர் புடையவர்கள் உறவினர்களாக இருப்பதால் சாட்சி சொல்வதில்லை என கூறினார்.

அதேபோல, அஸ்தம்பட்டி வடக்கு சரகத்தில் வழக்குகளை ஏன் விரைந்து முடிக்கவில்லை, கொலை வழக்குகள் அனைத்தும் நிலுவை இருக்கிறதே? என டிஜிபி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதவி கமிஷனர் தினகரன், பிரேத பரிசோதனைக்கான அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றார். உடனடியாக சென்னைக்கு தொடர்பு கொண்ட டிஜிபி, வழக்கு தொடர்பாக ஏன் இன்னும் அறிக்கைகளை அனுப்பவில்லை என கேட்டார். அதற்கு சென்னை அதிகாரிகள், அறிக்கை அனைத்தும் சென்று விட்டது. எதுவும் தங்களிடம் நிலுவையில் இல்லை’ என்றனர். இதனால் கோபமடைந்த டிஜிபி, உதவி கமிஷனர் தினகரனை கடிந்து கொண்டார்.

இதில் குறிப்பாக தர்மபுரி சப்-டிவிசனில் 12 கொலை  வழக்கில் அனைவரும் விடுதலையாகியுள்ளனர். இது குறித்து டிஎஸ்பி காந்தியை கடுமையாக எச்சரிக்கை செய்தார். பென்னாகரம் சப்-டிவிஷனில் 9 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி இருந்தனர். இதையடுத்து அந்த டிஎஸ்பியையும் கடிந்து கொண்ட டிஜிபி, சேலம் தெற்கு சரகத்தில் பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: