தேனியில் மர்மமாக இறந்த சிறுமி சாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் சமூக போராளி வலியுறுத்தல்

தேனி, டிச. 7:  தேனி அல்லிநகரத்தில் 12 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தது குறித்து சமூக போராளி சபரிமாலா சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தேனி அல்லிநகரில் ஒரு தனியார் சினிமா தியேட்டர் அருகே உள்ள காம்பவுண்டின் மேல்மாடியில் குடியிருப்பவர் ராஜா. இவரது மனைவி ஜெயா. இவர்களின் இரண்டாவது பெண் குழந்தை ராகவி(12). இச்சிறுமி இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் ராகவி வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இச்சிறுமி சாவு குறித்து போலீசார் முதலில் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிறுமியின் உறவினர்கள் கடும் போராட்டம் நடத்தியதையடுத்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இச்சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வினை எதிர்த்து தனது அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து சமூக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராளி சபரிமாலாஜெயகாந்தன் அல்லிநகரத்தில் உள்ள மர்மமான முறையில் இறந்து போன சிறுமி ராகவியின் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, இச்சிறுமியின் சாவுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: