கஜா புயலால் பாதிப்பு ஆலங்குடி பகுதியில் மீட்பு பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் பொதுமக்கள் கொந்தளிப்பு

ஆலங்குடி, நவ.22: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குபட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஜா புயலின் தாக்குதலால்  தென்னை, பலா, வாழை, பாக்கு, சந்தனம், நெல்லிக்காய் , தேக்கு உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான ஓடு மற்றும் கூரை வீடுகளும் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. இதனை அரசு அதிகாரிகள் முறையாக கணக்கு எடுக்க வரவில்லை என்றும், குடிநீர், மின்சாரம் உணவு உள்ளிட்ட எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என யாரும் கிராமபுரங்களுக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடாமல் மெத்தனமாக உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலையில் மரக்கிளைகளை போட்டும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் கொந்தளிப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் கடந்த 16ம் தேதி அதிகாலை மணிக்கு 110 கிமீ வேகத்திற்கு மேல் கஜா புயல் வீசியது. இதனால், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும், கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஓட்டு வீடுகளும், கூரைவீடுகளும், ஆஸ்பெக்டாஸ் சீட்டுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை இழந்தும், உண்ண உணவின்றியும், குடிநீரின்றியும் பொதுமக்கள்  பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதனால், பலகோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், பள்ளத்திவிடுதி, ஆலங்காடு, மேலாத்தூர், கீழாத்தூர், கே.ராசியமங்கலம், பாச்சிக்கோட்டை, ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அதேபோல் கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, தெற்குத்தெரு, கருக்காக்குறிச்சி, முள்ளங்குறிச்சி, பொன்னன்விடுதி, வாண்டான்விடுதி, கண்ணியான்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பயிரிட்டிருந்த விவசாய பயிர்களான வாழை, கரும்பு, நெல், காய்கறிகள், பூ, மிளகு உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், தென்னை, மா, கொய்யா, பலா, தேக்கு, நெல்லிக்காய், பாக்கு  போன்ற பல்வேறு லட்சக்கணக்கான மரங்களும் வேரோடு சாய்ந்தன.

இதனால், இப்பகுதி விவசாயிகள் சொல்ல முடியாத சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இந்த கஜா புயலின் தாக்கத்தால், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, பலா, எலுமிச்சை, கரும்பு, தேக்கு, பாக்கு, சந்தனம் உள்ளிட்ட சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.  மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால், குடிநீர் கிடைக்காமல் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம், குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்துவதிலும், அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதி பொதுமக்கள் உண்ண உணவின்றியும், குடிநீர் கிடைக்காமலும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மிகுந்த  கொந்தளிப்புடன் காணப்படுகின் றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களை மடக்கிப் பிடிக்கும் அதிமுகவினர் .

சென்னை, மதுரை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுக்கு கொண்டு வரப்படும் உணவு, உடை, குடிநீர், பால், பிஸ்கட், மெழுகுவர்த்தி, மருந்து மாத்திரைகளை பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், ரோட்டரி சங்கம், தொண்டு நிறுவனங்கள், தொழிற்துறை நிறுவனங்கள், ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் உட்பட அனைவரும் கொண்டு வரும் நிவாரண பொருட்களை அதிமுகவினர் புதுக்கோட்டை அருகேயுள்ள கேப்பரை பகுதியில் முகாமிட்டு கொண்டு வரும் பொருட்களை மடக்கி பிடித்து அபகரித்து கொள்கின்றனர். மேலும் அந்த பொருட்களை தாங்கள் அரசின் மூலம் வழங்குவது போல் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பிரித்துக் கொடுத்து வருகின்றனர்.

அந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள அதிமுக கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு மட்டும் வழங்கி வருகின்றனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு வடக்குப்பட்டியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் சங்க தலைவர் பால்சாமி கூறுகையில், இப்பகுதி விவசாயிகள் தாங்களாகவே சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். எனவே, உடனடியாக இப்பகுதிகளில் கீழே விழுந்ததுள்ள மரங்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். மணிக்கு ரூ 2 ஆயிரம் வாடகை ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இல்லாததால் குடிநீருக்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அலைந்து திரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வெளியிலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து ஆழ் துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும், அரசு இதுவரை  கிராமப்புறப்பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கும் வண்ணம்  எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கிராமபுறங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

Related Stories: